தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் பாலையன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் நெல் கொள்முதலுக்கு போதுமான சாக்கு இல்லை. எனவே குறைந்த பட்சம் 10 லட்சம் டன் கொள்முதல் செய்வதற்கு 3 கோடி சாக்குகளை போர்க்கால அடிப்படையில் உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை 17 சதவீதம் என பதிவு செய்து கொண்டு கொள்முதல் செய்ய நடைமுறைப்படுத்தியுள்ள வாய்மொழி உத்தரவை கைவிட்டு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படுகின்ற இழப்பை பணியாளர்கள் மீது சுமத்தக்கூடாது.


காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கொள்முதல் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதை காலதாமதம் செய்யக்கூடாது. கொள்முதல் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி, நிலுவைத்தொகை, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். சந்தானக்கிடங்கு வாடகைக்கு நிர்ணயித்தது குறித்தும், கோவில்பத்து கிடங்கு இடம் தேர்வு செய்தது, தரமற்ற கட்டிடம் கட்டியது குறித்தும் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமை சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாநில இணை பொதுச்செயலாளர் குணசேகரன், மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், நிர்வாகிகள் கணபதி, அன்பழகன், முருகேசன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்