அஞ்சல் அட்டை போட்டியில் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்கள்

அஞ்சல் அட்டை போட்டியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Update: 2019-01-10 22:30 GMT
குன்னம்,

தகவல் தொடர்பில் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அஞ்சல் அட்டை தற்போதைய சூழ்நிலையில் இளைய தலை முறையினருக்கு அரிய பொருளாகிவிட்டது. அனைவராலும் மறக்கப்பட்ட அஞ்சல் அட்டையை அரசு பள்ளி மாணவர்கள் நம் கண் முன்னே கொண்டு வருகின்றனர். பாரம்பரியமிக்க பொங்கல் திருநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தங்கள் கைப்பட அழகிய பொங்கல் படம் வரைந்து ஒருவருக்கொருவர் அனுப்பி வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கத்தினரான “கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற அமைப்பு அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வெளிக்கொணர்ந்து அவர்கள் வாழ்வை செம்மைப்படுத்துவதே நோக்கமாகும். மேலும் அஞ்சல் அட்டையில் வாழ்த்து படங்கள் வரைந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது, உள்நாட்டு உறையில் திருக்குறள் எழுதி அனுப்புவது, பாரம்பரியமிக்க சிறுதானிய உணவுகள் தயாரிக்கும் முறையினை எழுதி அனுப்புவது ஆகிய பல்வேறு போட்டிகளை நடத்தி பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது

இந்த போட்டியில் 60 அரசு பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். அவ்வாறு கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் படம் வரைந்து மற்ற பள்ளிகளுக்கு அனுப்பி தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். தங்கள் பள்ளிக்கு வந்தடைந்த அட்டைகளில் இருந்து முதல் 3 சிறந்த அட்டைகளை தேர்ந்தெடுத்து பதக்கங்களும், சான்றிதழ்களும் வருகிற குடியரசு தின விழா அன்று அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு போட்டிகளை நடத்த அனுமதி அளித்த தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் கேடயம் வழங்கப்படுகிறது.

இந்த அஞ்சல் அட்டை போட்டிகளால் பாரம்பரியமிக்க அஞ்சல் அட்டை பயன் படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் முகவரி பின்கோடு மற்றும் கடிதம் எழுதும் முறையை அறிந்துகொள்கின்றனர். 50 பைசா செலவிலேயே மாணவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. மாணவர்கள் தாமே வரைவதால் தன்னம்பிக்கை, கற்பனை திறன் படைப்பாற்றல் ஆர்வம் கிடைக்கிறது. பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் பற்றிய தகவல்கள் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளும் போது அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வும் வளர்கிறது.

சிறந்த அட்டைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உள்ளதால் சீர்தூக்கி ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் பண்பு வளர்க்கப்படுகிறது. தகுந்த வண்ணமிடும் பயிற்சியால் நிற வேறுபாடுகளை அறிகின்றனர். வாழ்த்துக்களை பெறும்போது மகிழ்வும், மனநிறைவும் பெறுகின்றனர். அஞ்சல் துறையின் செயல்பாடுகளை அதிகரிக்கின்றனர். மாணவர்களிடம் மதிக்கும் பண்பு வளர்க்கப்படுகிறது. இது போன்று அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங் களையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும் பெற்று சிறந்து விளங்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் அருகே உள்ள மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இப்பள்ளி மாணவர்கள் 45 அட்டைகளில் தங்களது வாழ்த்துக்களை வண்ணங்களாக்கி விருதுநகர் மாவட்டம், க.மடத்துப்பட்டி தொடக்கப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், சிலட்டூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மருவத்தூர் பள்ளிக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளனர். மருவத்தூர் பள்ளி தலைமையாசிரியர் பாலமுருகன், உதவி ஆசிரியர் முருகராணி ஆகியோர் இணைந்து வழி நடத்தி வருகின்றனர் அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த க.எறையூர் மற்றும் கல்லை நடுநிலைப்பள்ளிகளும் அஞ்சல் அட்டை போட்டியில் கலந்து கொண்டுள்ளது. 

மேலும் செய்திகள்