பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து கட்டுமாவடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-10 23:00 GMT
மணமேல்குடி,

மணமேல்குடி அடுத்துள்ள கட்டுமாவடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதையடுத்து அங்குள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. ஆயிரம் பாதி பேருக்கு வழங்கியும், பாதி பேருக்கு வழங்காமலும் உள்ளது. மேலும் அரசு அறிவித்துள்ள 25 கிலோ அரிசிக்கு பதிலாக 20 கிலோவும் மற்றும் சில ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் அரசு அறிவித்துள்ளதை விட குறைவாக வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கோபம் அடைந்தனர்.

இந்நிலையில் திடீரென பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கட்டுமாவடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (இன்று) பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்