மைசூருவில் 15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளுடன், உரிமையாளர்கள் வாக்குவாதம்

மைசூருவில் 15 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன், கடைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்

Update: 2019-01-10 22:15 GMT
மைசூரு,

மைசூரு டவுன் சிவராமபேட்டை பகுதியில் தொழிற்சாலை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில், நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் கட்டினர். இந்த கடைகளால் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. இதனால் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்று பாதசாரிகள் மைசூரு மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கடைகளின் உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை காலி செய்யவில்லை.

15 கடைகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சிவராமபேட்டை பகுதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் 15 ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடைகளை இடித்து அகற்றியதற்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்