மக்கள் நலத்திட்டங்களால் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மக்கள் நலத்திட்டங்களால் அ.தி.மு.க. அரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2019-01-10 23:00 GMT
மதுரை, 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டலத்திற்கு 63 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மதுரையில் இருந்து இயக்கப்படும் 18 பஸ்களின் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி பெரியார் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் கே.சேனாதிபதி, மதுரை மண்டல பொது மேலாளர் ராஜா சுந்தர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 555 புதிய பஸ் சேவைகளை கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார். அதில் மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 18 பஸ்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய பஸ்கள் கோவை, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், நாகர்கோவில், நெல்லை, நெய்வேலி, கம்பம், நாகப்பட்டினம், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு திட்டமும் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கும் திட்டம். அவரது திட்டங்களால் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கட்சியினரை வைத்து நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறார். மக்கள் யாரும் இந்த கூட்டத்திற்கு செல்வதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்