வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 3 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 3 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று கலெக்டர் நடராஜன் கூறினார்.

Update: 2019-01-10 23:05 GMT
மதுரை, 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், மதுரை சி.எஸ்.ஐ. கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பிற்காக 3 லட்சத்து 4 ஆயிரத்து 653 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தற்போது அரசு துறை அலுவலகங்களில் இருந்து பெறப்படும் பணிக்காலியிட அறிவிப்புகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தால் தகுதியான பதிவுதாரர்கள் பதிவுமூப்பின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படுகின்றனர். பெரும்பாலான அரசுப் பணிக்காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.

பல்வேறு போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வேலை தேடுபவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற ஏதுவாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளில் இதுவரை 567 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான அனைத்து புத்தகங்கள், மாதாந்திர இதழ்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்படுகிறது. எனவே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள், தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராகி பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கலெக்டர், தொழில்நெறி வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் மகாலட்சுமி, தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலக உதவி இயக்குனர் ராமநாதன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மதுக் குமார், கல்லூரி முதல்வர் ஜெஸிபாலின் ஜெயபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்