பொங்கல் பரிசுடன் ரூ.1,000 கொடுக்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

ஈரோட்டில் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 கொடுக்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-10 23:30 GMT
ஈரோடு,

தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இதில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்க நேற்று முன்தினம் கோர்ட்டு தடை விதித்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலர் ரேஷன் கடைக்கு படை எடுத்தனர். இதனால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலையிலும் ஈரோட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர். ஈரோடு வில்லரசம்பட்டி தென்றல்நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கப்பட்டது. இதனால் சர்க்கரை வாங்கும் ரேஷன் கார்டு வைத்திருந்தவர்கள் தங்களுக்கும் ரூ.1,000 பணம் தர வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் கூட்டுறவு சங்க மேலாளர் உமா சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “கோர்ட்டு தீர்ப்பு மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பொங்கல் பரிசு வினியோகிக்கப்படுகிறது”, என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சிலர் ரூ.1,000 இல்லாமல் பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக்கொண்டனர். மற்றவர்கள் பொங்கல் பரிசுகளை வாங்காமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் பல ரேஷன் கடைகளில் ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரூ.1,000 கொடுக்காததால் பொங்கல் பரிசுகளையும் வாங்காமல் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்