கண்ணமங்கலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக் கோரி சாலை மறியல்

கண்ணமங்கலத்தில் ரே‌ஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-11 22:45 GMT

கண்ணமங்கலம், 

கண்ணமங்கலம் குளத்து மேட்டுத்தெரு பகுதியில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளராக காவனூரை சேர்ந்த பிரேம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 9–ந் தேதி இந்த கடையில் சுமார் 1200 ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 வழங்கும் பணி தொடக்கப்பட்டது. இந்த கடையின் விற்பனையாளர் வண்ணாங்குளம் மற்றும் ஆண்டிப்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள ரே‌ஷன் கடைகளில் கூடுதல் பணி செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் வண்ணாங்குளத்திலும், நேற்று ஆண்டிப்பாளையம் கிராம ரே‌ஷன் கடைக்கும் பணிக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குளத்துமேட்டுத்தெரு ரே‌ஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க ரே‌ஷன் அட்டைதாரர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் விற்பனையாளர் காலை 10 மணிவரை வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கக் கோரி திடீரென வேலூர்– திருவண்ணாமலை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் குளத்துமேட்டுத் தெரு ரே‌ஷன் கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

மேலும் செய்திகள்