தொழில் தொடங்குவதற்காக ரூ.450 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் ஷில்பா பேச்சு

நெல்லை மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்காக ரூ.450 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் ஷில்பா கூறினார்.

Update: 2019-01-11 23:00 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சிகள் மாவட்ட தொழில் மையம் மூலம் கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை உள்ளது.

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.200 கோடி திட்ட மதிப்பீட்டில் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது.

அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளது. விவசாய பொருட்களான தக்காளி, எலுமிச்சை, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களில் இருந்து உப பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த பொருட்களை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விவசாய பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் தொழில் தொங்குவதற்கு ரூ.450 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கத்தில் தலித் இந்திய வர்த்தக கூட்டமைப்பு தலைவர் லெனின், தென்னிந்திய தலைவர் ராஜ்நாயக், துணை தலைவர்கள் சங்கர், தமிழழகன், மாவட்ட தொழில்மைய மேலாளர் முருகேஷ், சிப்காட் மேலாளர் லியோ, தாட்கோ மேலாளர் ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்