தூய்மை பாரத இயக்கம் சார்பில் கழிவறை சுவர்களில் சித்திரம் வரையும் போட்டி 31-ந் தேதி வரை நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ‘வாருங்கள் வரையலாம்’ என்ற தலைப்பில் கழிவறை சுவர்களில் சித்திரம் வரையும் போட்டி வருகிற 31-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.

Update: 2019-01-11 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தூய்மை பாரத இயக்கம் சார்பாக ‘வாருங்கள் வரையலாம்” என்ற தலைப்பில் கழிவறை சுவர்களில் சித்திரம் வரைய சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு ‘வாருங்கள் வரையலாம்”என்ற தலைப்பில் கழிவறை சுவர்களில் சித்திரம் வரைய சுவரொட்டிகளை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது;-

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பொது மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தங்கள் வீடுகளில் உள்ள கழிவறையை வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்துவதற்காகவும் வாருங்கள் வரையலாம் என்ற தலைப்பில் சித்திரம் வரையும் போட்டி வருகிற 31-ந்தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள தனிநபர் இல்ல கழிவறைகளில் தூய்மை பாரத இயக்கம் குறித்த வாசகங்கள், படங்கள் மற்றும் லோகோ போன்றவற்றினை வரைந்து வண்ணம் தீட்டும் போட்டி வருகிற 31-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

ஊரக பகுதிகளில் உள்ள தனிநபர் இல்லக் கழிவறைகளில் மட்டுமே ஓவியங்கள் வரைய வேண்டும். போட்டிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்டம், மாநில அளவில் நடைபெறும். ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிவறைகளில் தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், லோகோ மற்றும் படங்கள் ஆகியவற்றினை கொண்டு வண்ணம் பூசி அழகுப்படுத்திட வேண்டும். ஊக்குவிப்பாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவறையில் முதலில் வண்ணம் பூசி மற்றவர்களை ஊக்கப்படுத்திட வேண்டும்.

இந்த போட்டியில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். மகளிர் சுய உதவிக்குழுவினர் பெருமளவில் பங்கேற்பு செய்திடல் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு செய்யலாம். ஓவியம் வரையும்போது எடுத்த புகைப்படத்துடன் போட்டியாளர்கள் தங்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் தனிநபர் இல்ல கழிவறை பயனாளியின் பெயர் மற்றும் வரையப்பட்டுள்ள இடத்தின் பெயர் ஆகிய விபரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்திற்கு tutdr-da2016@gm-a-il.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 94435 06031, 94430 87072 என்ற எண்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் சிறந்த 3 வண்ணம் தீட்டப்பட்ட கழிவறைகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்