சோழிங்கநல்லூரில் காவலாளியிடம் பணம் பறித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு

சோழிங்கநல்லூரில் காவலாளியிடம் பணம் பறித்த வாலிபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2019-01-11 21:30 GMT
சோழிங்கநல்லூர்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்முண்டா (வயது 23) இவர் செம்மஞ்சேரி, ராஜீவ்காந்தி தெருவில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள வங்கி ஒன்றில் பணம் செலுத்த வங்கிக்கு வந்தார். அபோது வெளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அஜித்முண்டா வங்கியில் பணம் செலுத்த வந்ததை அவருடைய பேச்சில் இருந்து தெரிந்துகொண்ட அந்த நபர் திடீரென அஜித்முண்டா வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓட்டமெடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அஜித்முண்டா சத்தம் போட்டார்.

இதையடுத்து பணத்தை பறித்துக்கொண்டு ஓடிய அந்த நபரை பொதுமக்கள் விரட்டிபிடித்தனர். பின்பு அவரிடம் இருந்த பணத்தை மீட்டனர். இது பற்றி தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் அந்த நபரை போலீஸ்நிலையம் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுலல்சஹானி (வயது 21) என்பதும், பீகாரில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் சென்னைக்கு வந்திருப்பதாகவும் அதே மொழி தெரிந்த நபர்களிடம் பேச்சு கொடுத்து நைசாக பேசி பணத்தை பறிப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்