கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தக்கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-01-11 23:15 GMT

புதுச்சேரி,

லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை உடனே வழங்கவேண்டும், முத்தரப்பு கூட்டம் என்ற பெயரில் விவசாயிகளை அழைத்து பழைய பாக்கிகளை பற்றி பேசாமல் 2016–17ம் ஆண்டு பாக்கி ரூ.9 கோடியே 61 லட்சத்தை பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்க எடுத்த முடிவினை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகே கரும்புகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்துக்கு புதுவை கரும்பு விவசாயிகள் சங்க கவுரவ தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நிலவழகன் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வாழ்த்திப் பேசினார்.

உண்ணாவிரதத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் சங்கர், பத்மநாபன், ராமமூர்த்தி, முத்துலிங்கம், ராமசாமி, அன்புமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்