விதானசவுதாவில் ரூ.25.80 லட்சம் பறிமுதல் வழக்கில் காங்கிரஸ் மந்திரிக்கு தொடர்பா? சட்டப்படி நடவடிக்கை என குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு விதான சவுதாவில் ரூ.25.80 லட்சம்பறிமுதல் செய்த விவகாரத்தில்மந்திரி புட்டரங்கஷெட்டிக்கு தொடர்பா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2019-01-11 23:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் கடந்த 4-ந்தேதி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.25.80 லட்சம் பணம் வைத்திருந்ததாக மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இவர் காங்கிரசை சேர்ந்தவரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியுமான புட்டரங்கஷெட்டியின் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

எனவே இந்த விவகாரத்தில் மந்திரி புட்டரங்கஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆகவே அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

சட்டப்படி நடவடிக்கை

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விதான சவுதாவில் சிக்கிய ரூ.25.80 லட்சம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இது எனது கவனத்தில் உள்ளது. மந்திரி புட்டரங்கஷெட்டியை தொடர்புபடுத்தும் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.

குரங்கு காய்ச்சல்

இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டப்படி முடிவு எடுப்பேன். வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தில் சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வெளிப்படையாக பேச முடியாது.

சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன். குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயப்பட தேவை இல்லை. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபற்றி அவர்களிடம் தொடர்ந்து விவரங்களை கேட்டு பெற்று வருகிறேன்.

மண்டியா தொகுதியில்...

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் எனது மகன் நிகில் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள். இதுபற்றி எங்கள் கட்சி இறுதி முடிவு எடுக்கும்.

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தனது செயல்பாடுகள் மூலம் அரசியல்வாதிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளார். நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்திய அவர், “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மரியாதை

முன்னதாக முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்