சாலை விதி மீறல்; ஓராண்டில் 16 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விதிகளை மீறிய 16 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-11 22:30 GMT

சிவகங்கை,

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:– மாவட்டத்தில் கடந்த 2018–ல் நடந்த 863 சாலை விபத்துக்களில் 244 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காயத்தால் 27, சிறு காயத்தால் 435 பேர் பாதித்துள்ளனர். இது போன்று சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள், மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஆண்டில் 16 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, முக்கிய ரோடுகள், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கிராம சாலைகளில் வேகத்தடை அமைத்துள்ளோம்.

காரைக்குடி–குன்றக்குடி ரோடு, தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை ரோடுகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2017–ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018–ம் ஆண்டு 65 சதவீத திருட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

10 ஆண்டுக்கும் மேலாக ரவுடி பட்டியலில் இருந்தவர்களில் 51 பேர் நன்னடத்தை அடிப்படையில், ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2018–ல் மட்டுமே பிடிவாரண்டு நிலுவை வழக்கு குற்றவாளிகள் 3 ஆயிரத்து 729 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்