பெண்ணாடம் அருகே பரபரப்பு ,அரசு பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்

பெண்ணாடம் அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2019-01-11 22:44 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் மிகவும் பழமைவாய்ந்தது ஆகும். இதை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. அப்போது வகுப்பறைகளில் அமர்ந்து மாணவ, மாணவிகள் பாடம் படித்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் வராண்டா பகுதியில் உள்ள கான்கிரீட் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் இடிந்து விழுந்தன.

கட்டிடத்தின் ஒரு பகுதியில் மட்டும் மேற்கூரை இடிந்து விழுந்ததை பார்த்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் பள்ளியில் ஒன்று திரண்டனர். பள்ளி கட்டிடம் மேற்கொண்டு எப்போது வேண்டுமானாலும் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகலாம் என்கிற நிலையில் இருந்து வருவதால், பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்ப பெற்றோர் மறுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதற்கு கிராம மக்களும் சம்மதம் தெரிவித்ததால், கோவில் வளாகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது.

பள்ளி கட்டிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும், எனவே இங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறி, ஏற்கனவே ‘தினத்தந்தி’யில் நகர்வலம் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கிறது. இதை முன்கூட்டியே அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுத்து இருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம். மேலும் இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்