அம்மா இருசக்கர வாகன திட்டம்: பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாள் - கலெக்டர் தகவல்

இருசக்கர வாகன திட்டத்தில் சேருவதற்கு பெண்கள் விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-11 23:42 GMT
நாகர்கோவில்,

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதற்காக 18-ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களுக்கு செல்ல இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப் படாத நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில், வியாபாரம் மற்றும் இதர பணிகள் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பயனாளியின் வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதிகள், மகளிரை குடும்ப தலைவராக கொண்டவர்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவை, தாழ்த்தப்பட்ட- பழங்குடி மகளிர் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊரக பகுதிகளில் உள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும், நகராட்சி பகுதிகளில் உள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 8-ந் தேதி முதல் பெறப்படுகிறது. வருகிற 18-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவத்துடன் வயது சான்று (பள்ளிச்சான்று), இருப்பிடச்சான்று, இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிச்சான்று, ஆதார் கார்டு நகல், கல்வி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்னுரிமைக்கான சான்று, சாதி சான்றிதழ் நகல் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், இரு சக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்