கீழ்வேளூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கீழ்வேளூர் அருகே வடக்கு பனையூரில் இருந்து தெற்கு பனையூர் செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-11 23:56 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்கு பனையூரில் இருந்து தெற்கு பனையூர் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சாலையை வடக்கு பனையூர், பசுகடைவெளி, தெற்குபனையூர், வள்ளவிநாயக கோட்டகம், முப்பத்திக்கோட்டகம், களத்திடல்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் வடக்கு பனையூரில் இருந்து தெற்கு பனையூர் செல்லும் சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. திருவாரூர்-முப்பத்திக்கோட்டகம் வரை அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது.

தற்போது சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் வடக்குபனையூர் வரை தான் அந்த பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே வடக்கு பனையூரில் இருந்து தெற்கு பனையூர் செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்