சேலத்தில், உதவித்தொகை வந்ததாக கூறி மூதாட்டி உள்பட 2 பெண்களிடம் நகை அபேஸ்

சேலத்தில் உதவித்தொகை வந்ததாக கூறி மூதாட்டி உள்பட 2 பெண்களிடம் நகை அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-12 22:45 GMT
சேலம், 

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 60). வளையக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் குப்பாயி (55). இவர்கள் நேற்று முன்தினம் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மாலை நேரத்தில் கோகிலா வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவர் கோகிலாவிடம் நீங்கள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்ததற்கு தற்போது காசோலையாக ரூ.30 ஆயிரம் வந்துள்ளது. காசோலையை பெற நீங்கள் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் தந்துவிடுவேன் என தெரிவித்தார். அதற்கு கோகிலா என்னிடம் பணம் இல்லை என அவரிடம் கூறினார்.

அதற்கு அந்த நபர், உங்களிடம் நகை இருந்தால் கொடுங்கள் அதை தபால் அலுவலகத்தில் அடமானமாக வைத்து நான் ரூ.15 ஆயிரத்தை பெற்றுக்கொள்கிறேன் எனக்கூறினார். இதைநம்பி அவர் தன்னுடைய காதில் கிடந்த ½ பவுன் கம்மலை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார். இதைபெற்றுக்கொண்ட அவர் இந்த நகை போதுமானதாக இல்லை என்றார். இதனால் கோகிலா தனது உறவினர் குப்பாயி கழுத்தில் கிடந்த ½ பவுன் கம்மலையும் வாங்கி அந்த நபரிடம் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து 2 பெண்களிடமும் ஒரு பவுன் நகையை பெற்றுக்கொண்ட அந்த நபர், நீங்கள் சேலையை மாற்றிவிட்டு தபால் நிலையம் செல்ல தயாராகுங்கள், உங்களை நான் அழைத்து செல்கிறேன் என்றார். அதன்பேரில் கோகிலா சேலையை மாற்ற வீட்டிற்குள் சென்றார். இதனிடையே அந்த நபர் கோகிலா வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் நின்றவரின் வண்டியில் ஏறினார்.

இதைப்பார்த்து மூதாட்டி செய்வதறியாமல் திகைத்து சத்தம் போட்டார். அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கோகிலா வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நகையை அபேஸ் செய்ததாக வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

மேலும் செய்திகள்