நெல்லையில் மாணவியை தாக்கியதாக புகார்: அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு

நெல்லை டவுனில் மாணவியை துடைப்பத்தால் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டதால் அரசு பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-01-12 22:45 GMT
நெல்லை, 

நெல்லை டவுன் கோடீஸ்வரன்நகரை சேர்ந்த மாணவி ஒருவர் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி வகுப்பறையில் இருந்தபோது அறிவியல் ஆசிரியர் ஜோசப் செல்வின் என்பவர், மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது.

மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் வேல்கனி, தலைமை ஆசிரியை ஆனந்த பைரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் ஜோசப் செல்வின் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்