கோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கோவையில் திவாகரன் பேட்டி

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் கோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று திவாகரன் கூறினார்.

Update: 2019-01-12 23:30 GMT

கோவை,

அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கோடநாடு கொலை வழக்கில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை. தெகல்கா ஊடகம் எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை சொல்கிறது என தெரியவில்லை. ஆனால் அதனை நிரூபிக்க வேண்டிய கடமை அந்த ஊடகத்திற்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

எத்தனை சக்தி வாய்ந்த மனிதர்களாக இருந்தாலும், உண்மையை மறைக்க முடியாது. இந்தியாவில் குற்றம் செய்த எத்தனையோ முதல்– அமைச்சர்கள் சிறையில் இருந்திருக்கின்றனர். கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலரை கைது செய்துவிட்டதால், அந்த வழக்கு முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது.

இந்த விவகாரத்தில் தொடர் கொலை நடைபெற்றதுடன், தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் பெயர்கள் அடிபடுவதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் தினகரன் இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஜெயலலிதா இறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை. சிலரின் அரசியல் ஆசைகளால்தான் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் சில பிரச்சினைகள் எழுந்து அ.தி.மு.க. மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அங்கு இருந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் தான் அப்பல்லோவில் சாப்பிட்டனர். அதனால்தான் அப்பல்லோவில் உணவு கட்டணம் அதிகரித்தது. தற்போது இது தொடர்பாக தரங்கெட்ட பேச்சை பேசக்கூடாது. இப்போது சசிகலாவை குற்றம்சாட்டுபவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தபோது என்ன செய்தனர். அவர்கள் கோமாவிலா இருந்தனர்.

அமைச்சர்கள் அ.தி.மு.க.வை இணைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் முறையான ஒருங்கிணைப்பு வேலை நடைபெறவில்லை. பொத்தாம் பொதுவான அழைப்பை விடுக்கிறார்கள். இது வெத்து அழைப்பு. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இணைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முறையான உள்ளார்ந்த வேலையை ஓ.பன்னீர்செல்வம் எடுக்கவில்லை. கட்சியை இணைக்க அழைப்பு விடுத்தால் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனது முகத்தை காட்டி ஓட்டு கேட்க ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டது உண்மை. 20 ரூபாய் டோக்கனை கொடுக்காவிட்டால் டி.டி.வி. தினகரன் தோல்வி அடைந்து இருப்பார். தினகரன் கட்சி இன்னும் பதிவுகூட செய்யப்படவில்லை. தினகரன் கட்சியில் நியமிக்கப்பட்டுள்ள 90 சதவீதம் பொறுப்பாளர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்