போஸ்நகர், கொத்தகோட்டையில் நிவாரண பொருட்கள் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

போஸ்நகர், கொத்த கோட்டையில் நிவாரண பொருட்களை வழங்ககோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-12 22:30 GMT
புதுக்கோட்டை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முறையாக நிவாரணம் வழங்கவில்லை எனவும், அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை போஸ் நகரில் உள்ள அரசு பள்ளியில் வைத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரண பொருட்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதால், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் சென்றடையவில்லை எனக்கூறியும், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் நிவாரண பொருட்கள் கொடுக்கும் பள்ளிக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நிவாரண பொருட்களை பெற்ற சிலர் நிவாரண பொருட்களுடன் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு நீண்டவரிசையில் காத்திருந்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவரங்குளம் அருகே கொத்தகோட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு நிவாரண பொருட்கள் வழங்கவில்லை. இதையடுத்து நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி வம்பன் நால்ரோட்டில் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்