காரைக்காலில் ரோந்து பணியின் போது சிக்கினர்: கொள்ளைக் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது

காரைக்காலில் கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-01-12 23:00 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால் உத்தரவின்பேரில் காரைக்கால் கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை காரைக்கால் நண்டலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நண்டலாறு சுனாமி நினைவு மண்டபம் அருகே, 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்ததை கண்டனர். போலீசார், அந்த கும்பலை நெருங்கியபோது, அவர்கள் தப்பி ஓடினார்கள்.

போலீசார் அவர்களை துரத்திச் சென்று 2 பேரை மடக்கிப்பிடித்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். பிடிபட்டவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் சீர்காழி சாமிநாத செட்டியார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் ராஜதுரை (வயது 23), கச்சேரி ரோட்டைச் சேர்ந்த வீராசாமி மகன் ராமசாமி(19), ஆகியோர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த அரவிந்த், சீர்காழியை சேர்ந்த சாம்சன், விஜய் பிரவீன் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் ஏற்கனவே மயிலாடுதுறையில் விநாயகர் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து பணத்தையும், சிறிய வெள்ளி கிரீடத்தையும் கொள்ளையடித்ததும் அம்பலமானது.

கோட்டுச்சேரி மற்றும் காரைக்கால் நகர் பகுதியில் கொள்ளை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வந்ததாக போலீசாரின் விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பிடிபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்புக் கம்பி, வெள்ளி கிரீடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மோட்டர் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அவர்களது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்