திருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பு: தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உள்பட 4 பேர் காயம் பொதுமக்கள் சாலைமறியல்

திருச்சி அரியமங்கலத்தில் தெரு நாய்கள் கடித்து சிறுவர்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-12 22:30 GMT
பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. நாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து கட்டுப்படுத்திட, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முறையான முயற்சிகள் மேற்கொள்ளாததால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். தெரு நாய்கள் கடித்ததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கல்லுக்குழி உள்ளிட்ட இடங்களில் வீதியில் விளையாடிய சிறுமி மற்றும் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற சிறுமி உள்ளிட்ட சிலரை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் நினைவு கூரத்தக்கது. ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்காதது வேதனையானது என பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை திருச்சி அரியமங்கலம் 28-வது வார்டு பகுதிக்குட்பட்ட காமராஜ்நகர் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள், வீதியில் சென்ற மக்களை துரத்தி துரத்தி கடித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். காமராஜ் நகரில் ஹக்கீம் என்ற சிறுவன் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தெருநாய்கள் கூட்டமாக வந்து ஹக்கீமை துரத்தி துரத்தி கடித்தன.

அதைப்பார்த்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஜோஸ்வா(12), அபுதாகீர்(34), திரு(30) ஆகியோர் ஹக்கீமை காப்பாற்றும் முயற்சியாக நாய்களை கல்லெறிந்து துரத்தினர். ஆனால், மாறாக நாய்கள் இவர்கள் பக்கம் திரும்பி மூவரையும் கடித்து குதறின. இதில் அவர்களுக்கு உடலில் கை, மார்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் நாய்கள் கடித்ததால் ரத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த சமயத்தில் வீதியில் உள்ள மக்கள் ஒன்றுகூடவே, நாய்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன. காயம் அடைந்த 4 பேருக்கும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே நாய்களை கட்டுப்படுத்த தவறிய திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் அரியமங்கலத்தில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காமராஜ்நகர் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.

தகவல் அறிந்ததும் அரியமங்கலம் போலீசார் விரைந்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில்,‘நாய்களை பிடித்து கட்டுப்படுத்திட மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்து விட்டோம். அதற்கு அவர்கள், ‘புளுகிராஸ்’ அமைப்பை காரணம் காட்டி தட்டிக்கழித்து வருகிறார்கள். நாய்களை பிடித்து கொல்வதற்குத்தான் புளுகிராஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும். அவற்றை அப்புறப்படுத்தி இனப்பெருக்கம் செய்யாமல் கருத்தடை ஆபரேஷன் செய்வதற்கு தடை ஏதும் இல்லை. அரியமங்கலம் பகுதியில் இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறி உள்ளன. எனவே, உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து நாய்களை கட்டுப்படுத்திட உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் மறியலை கைவிடப்போவதில்லை’ என்றனர்.

சிறிது நேரம் கழித்து அரியமங்கலம் கோட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள், வாகனங்கள் மூலம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலைமறியல் போராட்டம் காரணமாக திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்