பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்து பிளஸ்–1 மாணவர் தற்கொலை

கூடலூர் அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-12 22:00 GMT

கூடலூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளாக கூடலூர் அருகே உள்ள கவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்.

அவருடைய மகன் கங்குலி (வயது 16). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கங்குலி பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் பெற்றோர் கங்குலியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கங்குலி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கங்குலி, பூச்சி மருந்தை (வி‌ஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்–1 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்