‘தாக்கரே’ படத்துக்கு தணிக்கை வாரியம் அனுமதி சஞ்சய் ராவத் தகவல்

தாக்கரே படத்துக்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Update: 2019-01-12 23:15 GMT
மும்பை,

மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு ‘தாக்கரே’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி, தயாரித்துள்ளார்.

பால் தாக்கரேயின் வேடத்தில் நவாசுதீன் சித்திக் நடித்து உள்ளார். வருகிற 25-ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பாந்திராவில் நடைபெற்றது. இசை குறுந்தகடை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.

விழாவில் சஞ்சய் ராவத் பேசியதாவது:-

தணிக்கை வாரியம் அனுமதி

தாக்கரேயின் இந்திப்படத்துக்கு மத்திய சினிமா தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது. மராத்தி மொழியில் எடுக்கப்பட்ட படம் நாளை(இன்று) தணிக்கை வாரியத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த படத்தின் சில காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல் வெளியாகிறது. யார் இப்படி எதிர்ப்பு கிளம்பியதாக கூறியது? இது அனைவரும் காணவேண்டிய படமாகும்.

பால் தாக்கரே முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை. அவர் ஒரு உண்மையான தேசபக்தர் மற்றும் எந்தவொரு இடத்திலும் மதம் மற்றும் சாதியை அவர் முன்னிறுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உணர்ச்சிவசப்பட்டேன்

இதேபோல் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே கூறுகையில், படத்தின் டிரைலரை பார்த்தேன், நவாசுதீன் சித்திக் தனது திறமையான நடிப்பால் பால் தாக்கரேவை திரையில் கொண்டுவந்துள்ளார். அவரது நடிப்பு மறைந்த சிவசேனா நிறுவனரின் நினைவுகளை மீண்டும் மலரச்செய்ததால் உணர்ச்சிவசப்பட்டேன்.

இந்த படம் மக்களுக்கு அவரின் நியாபகங்களை மீண்டும் நினைவூட்டும் என்று நம்புகிறேன், என்றார்.

மேலும் செய்திகள்