நிவாரண பெட்டகம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கோட்டூர் அருகே நிவாரண பெட்டகம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-12 22:48 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான், காந்தாரி, மறவாதி, ஏரிக்கரை, ஆவிடைத்தேவன்குளம் ஆகிய 5 கிராமங்களில் உள்ள கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் இதுவரை வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும் நேற்று பெருகவாழ்ந்தான் கடைவீதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டையில் உள்ள 2-வது வார்டு பகுதிக்கு நிவாரண பொருட்கள் வழங்க வருவாய்த்துறையினர், அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், 1,10,12 ஆகிய வார்டுகளில் புயலால் பாதிக்கப்பட்ட மாடி வீடுகளில் உள்ளவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வலியுறுத்தியும் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், நிவாரண பொருட்கள் வழங்குவது வருவாய்த்துறையினர் பிரச்சினை, இதனால் சாலை மறியலில் ஈடுபடுவது தவறானது என்றும், பொங்கல் சமயத்தில் இவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதால் பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள் என கூறினார். இதனால் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சாலை மறியலை கைவிடும் படி கூறினார். பின்னர் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி ஆதிரெங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆதிரெங்கம் ஆர்ச் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்