நகரும் சொகுசு கழிவறை

பஸ்சின் உள்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு வசதிகள். வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறார்கள்.

Update: 2019-01-13 09:37 GMT
ஸ்சின் உள்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு வசதிகள்.
வெளியிடங்களுக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறார்கள். அவை தூய்மையாக பராமரிக்கப்படாததே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த குறையை தீர்க்க பல இடங்களில் நடமாடும் மொபைல் கழிவறைகள் சிறந்த பராமரிப்புடன் உலா வந்து கொண்டிருக்கின்றன. புனேவில் பெண்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு ஏதுவாக நடமாடும் ‘மொபைல் கழிவறைகள்’ இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வாகனம் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அழகிய கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பயன்பாட்டில் இல்லாமல் ஓரங் கட்டப்பட்ட பழைய பஸ்களை பெண்கள் சவுகரியமாக பயன்படுத்தும் வசதிகளுடன் உருமாற்றி இருக்கிறார்கள்.

அந்த பஸ்களில் இந்திய கழிப்பறைகள், மேற்கத்திய கழிப்பறைகள், டயாப்பர் மாற்றும் அறைகள், வாஷ்பேஷின்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மாதவிடாய் சமயங்களில் பெண்கள் சவுகரியமாக பயன் படுத்துவதற்கு ஏற்பவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆசுவாசமாக அமர்ந்து ஓய்வெடுக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சோலார் பேனல்கள் மூலம் இந்த பஸ்களில் இலவச வை-பை வசதியும் இருக்கிறது. உல்கா சதால்கர் மற்றும் ராஜீவ் கெர் ஆகிய இரண்டு தொழில் முனைவோர்களின் முயற்சியில் இந்த மொபைல் கழிவறை ஜொலிக்கிறது.

இதுபற்றி உல்கா சதால்கர் கூறுகையில், ‘‘வீடு இல்லாத மக்களுக்கு பழைய பஸ்களை கழிப்பறையாக மாற்றிக்கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டோம். அந்த பஸ்களை வாங்கி அனைத்து பெண்களும் பயன்படுத்தும் விதத்தில் உருவாக்க திட்டமிட்டோம். ஏனெனில் புனே, மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம். அங்கு கழிவறைகள் கட்டுவதற்கு போதுமான இடம் இல்லை. இருக்கும் கழி வறைகளும் சுத்தமானதாக இல்லை. பஸ்களை கழிவறையாக பயன்படுத்துவதற்கு அதிக இடம் தேவைப்படாது. அவை ஒரே இடத்தில் நிரந்தரமாகவும் நிற்காது என்பதால் இட நெருக்கடியும் ஏற்படாது. புனே நகராட்சியுடன் இணைந்து இந்த மொபைல் கழிப்பறை திட்டத்தை செயல்படுத்த தொடங்கினோம். பஸ்சில் இருக்கும் காலி இடத்தில் பெண் களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். இது மாதவிடாய் காலங்களில் வெளியே செல்லும் பெண் களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.

இந்த மொபைல் கழிப்பறை வாகனத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது 11 பஸ்கள் புனே நகரில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ‘‘அவள்’’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்