முதலில் விபத்து.. பின்பு ஓட்டம்..

ரெயில் விபத்தில் சிக்கி கால் பாதத்தை இழந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், மாரத்தான் போட்டிக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.

Update: 2019-01-13 10:37 GMT
ரெயில் விபத்தில் சிக்கி கால் பாதத்தை இழந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், மாரத்தான் போட்டிக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். சிகிச்சையின் ஒரு அங்கமாக தினமும் நடைப்பயிற்சி பழகிக்கொண்டிருப்பவர், இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்புவதற்காகவே மாரத்தான் போட்டிக்களத்தை தேர்வு செய்திருக்கிறார். போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் கால அளவை அதிகரிக்க செய்திருக்கிறது. அத்துடன் டிரெட்மில்லில் பயிற்சி பெறும் அளவிற்கு உடல் தகுதியையும் மேம்படுத்த வைத் திருக்கிறது. டாக்டரின் வழி காட்டுதலின்படி பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் டிராவிதா சிங். மும்பையை சேர்ந்தவரான இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயிலில் படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்திருக்கிறார். அப்போது செல்போன் திருடன் ஒருவன் அவரது போனை திருட முயன்றிருக்கிறான். அதனை தடுக்க முயன்றபோது திருடன் தாக்கியதில் டிராவிதா நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது எதிர் திசையில் வந்த ரெயில் அவரது இடது கால் மீது ஏறியதில் கால் பாதம் சிதைந்துபோய்விட்டது. கை விரல்களும் பாதிப்புக்குள்ளானது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஐந்து அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு மாதத்திற்கு பிறகு படிப்படியாக நடைப்பயிற்சி மேற்கொள்ள பழகியவர் 11 மாதங்களில் டிரெட்மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் தன்னை தயார்படுத்திவிட்டார். வருகிற 20-ந்தேதி மும்பையில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்கு தனது பெயரை பதிவு செய்திருக்கிறார். அதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

‘‘டாக்டர்கள் நான் மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்கு தடை எதுவும் விதிக்கவில்லை. எனது குடும்பத்தினரும், டாக்டர்களும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகும் சிரமமின்றி விரைவாகவே நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிந்தது. மற்றவர்கள் கவனமும் என் மீது திரும்பியது. அந்த உற்சாகத்தில் மாரத்தானில் பங்கேற்பதற்கு ஆவலாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் எவ்வளவு தூரம் நடக்கிறேன் என்பதை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறேன். என் நடையின் வேகம் அதிகரித்து இருக்கிறது. தினமும் ஏழு கிலோ மீட்டர் தூரமாவது நடந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்