இண்டூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

இண்டூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-13 22:15 GMT
பாப்பாரப்பட்டி, 

நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் அருகே உள்ள கோரப்பள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் இதுவரை வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

தற்போது போதிய மழை இன்றி நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு போய் விட்டது. இதன் காரணமாக ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி உள்ளது. இதனால் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அப்பகுதியில் உள்ள தர்மபுரி-பென்னாகரம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்