கோபி அருகே தாய்-தந்தையை தேடி ரோட்டில் சுற்றிய சிறுமி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

கோபி அருகே தாய்-தந்தையை தேடி ரோட்டில் சுற்றிய சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2019-01-13 23:15 GMT
கடத்தூர், 

திருப்பூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 29). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நீலாமணி (28). இவர்களுடைய மகள் சுபஸ்ரீ (7). இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் விழாவில் கலந்துகொள்ள கரட்டடிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சவுந்தர்ராஜன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். சிறுமி சுபஸ்ரீ வீட்டில் உள்ள மற்ற சிறுமிகளுடன் தூங்கிக்கொண்டு இருந்தாள். நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுபஸ்ரீ திடுக்கிட்டு எழுந்து பார்த்தாள்.

அப்போது தன்னுடைய பெற்றோர் தன்னைவிட்டுவிட்டு திருப்பூருக்கு சென்றுவிட்டார்கள் என்று எண்ணி வீட்டைவிட்டு வெளியேறினாள். பின்னர் கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி-சத்தியமங்கலம் ரோட்டின் ஓரத்தில் அழுதபடி நின்று கொண்டு இருந்தாள். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த தமிழ்கனல் என்பவர் அந்த வழியாக சென்றபோது சிறுமி ரோட்டில் நின்று அழுது கொண்டு இருந்ததை கவனித்தார். உடனே இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த சிறுமியை மீட்டு கோபி போலீஸ் நிலையத்த்திற்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் சவுந்தர்ராஜன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் நேற்று காலை கோபி போலீஸ் நிலையத்தில் தன்னுடைய மகளை காணவில்லை என்று புகார் கொடுக்க வந்தனர். அப்போது அங்கு சுபஸ்ரீ இருப்பதை பார்த்து அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்