நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து: காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற டிரைவர் பலி

நாகை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி மதுபாட்டில்களை கடத்தி சென்ற காரின் டிரைவர் பலியானார். அவருடன் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-01-13 23:00 GMT

நாகப்பட்டினம்,

நாகை அருகே உள்ள வாஞ்சூர் பகுதியில் இருந்து நேற்று ஒரு கார் புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாஞ்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த காரின் பின்பக்க டயர் பஞ்சரானது. இதனால் அந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

அதே பகுதியில் கரும்பு கட்டுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று பஞ்சராகி நின்றது. அதன் டிரைவரும், கிளீனரும் லாரியின் பஞ்சரான டயரை கழற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தாறுமாறாக ஓடிய கார், நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்தவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விபத்தில் பலியான கார் டிரைவர் நாகை வெளிப்பாளையம் ரெயிலடி தெருவை சேர்ந்த சேகர் (வயது28) என்பதும், காரில் அவருடன் வந்தவர் செந்தில் (35) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்றபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுவிலக்கு போலீசார் காரை விரட்டி சென்று பிடிக்க முயன்றதால் விபத்து நடந்ததாக கூறி, விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் நாகை அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்