மத்திய அரசின் அறிவிப்பால் ஆன்லைன் ஆடை வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு

மத்திய அரசு ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பை அதிகரித்து அறிவித்துள்ளதால், திருப்பூரில் ஆன்லைன் ஆடை வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Update: 2019-01-13 22:45 GMT

திருப்பூர்,

நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிவித்தது. இதனால் பின்னலாடை தொழில் கடும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சாய ஆலைகள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள், எந்திரங்களுக்கு என பலதரப்பட்ட வரி இருந்தது. இதனால் தொழில்துறையினர் அவதியடைந்து வந்து கொண்டிருந்தார்கள்.

இதில் இருந்து மீள முடியாத நிறுவனங்கள் பல மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்நிலையில் திருப்பூரில் ஒவ்வொரு தொழில்துறையினரும் தங்களுக்கு உகந்த ஆடைகளை தயாரித்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடைகளை வாங்க வேண்டும் என்றால் பொதுமக்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் இதனை எளிமைப்படுத்தும் விதமாக ஆன்லைனில் பலர் திருப்பூரில் ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் ஆடைகளின் படம், சிறப்பம்சம், அளவு, விலை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதில் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து பணம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து அவர்களது வீட்டு முகவரிக்கு ஆடைகள் அனுப்பிவைக்கப்படும். இந்நிலையில் திருப்பூரில் பலர் ஆன்லைனில் ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தனர். தற்போது மத்திய அரசின் அறிவிப்பின் காரணமாக ஆன்லைன் ஆடை வர்த்தகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து ஆன்லைன் ஆடை வர்த்தகர்கள் கூறியதாவது:–

ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சமாக இருந்தது. இதனால் ஆன்லைன் ஆடை வர்த்தகத்தில் ஈடுபட தொழில்துறையினர் பலர் ஆர்வம் காட்டவில்லை. புதிய தொழில்துறையினரும் ஆன்லைனில் ஆடை வர்த்தகத்தில் ஈடுபட தயங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்முனைவோர் ஆன்லைனில் ஆடை வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் ஆடை வர்த்தகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்