பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி சாவு விசாரணை நடத்துமாறு போலீசில் மனைவி புகார்

பல்லடம் அருகே வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.

Update: 2019-01-13 22:15 GMT

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 46). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு தரனீஷ் (11) என்ற மகனும், கிருத்திகா (9) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்த வெள்ளியங்கிரி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வெள்ளியங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வெள்ளியங்கிரியின் மனைவி கவிதா, பல்லடம் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:–

எனது கணவரின் உறவினர்கள் சுப்பிரமணி மற்றும் ஆறுமுகம். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதில் எனது கணவர் ஆறுமுகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கொசவம்பளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே எனது கணவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியும், அவருடைய மகனும், என்னுடைய கணவருடன் தகராறு செய்துள்ளனர். அதன்பின்னர் வீட்டிற்கு வந்த எனது கணவர், மயங்கி விழுந்தார். எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளியங்கிரியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்