முதல்–அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது திருச்சி கோர்ட்டில் வழக்கு

முதல்–அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2019-01-13 23:00 GMT

திருச்சி,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த 23–8–2018 அன்று வெள்ளப்பெருக்கின் காரணமாக 9 மதகுகள் உடைந்து விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனை பார்வையிட்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கதவணை கட்டுவதற்கு உத்தரவிட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உடைந்த அணையை பார்வையிட்ட பின்னர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ‘தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொள்ளிடம் அணையை பார்வையிட்ட பின் அளித்த பேட்டியில் முதல்–அமைச்சர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் அணையில் உடைப்பு ஏற்பட்டதாக கூறி அவதூறு பரப்பி இருக்கிறார்’ என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.குமரகுரு, மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13–ந்தேதி திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என உத்தரவிட்டார்.

இதே கோர்ட்டில் சம்பத்குமார் தாக்கல் செய்த இன்னொரு மனுவில் ‘திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கமி‌ஷனுக்கு ஆசைப்பட்டு கொள்ளிடம் அணையை உடைத்தார்களா? என சந்தேகிப்பதாக’ பேட்டி அளித்து உள்ளார் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி குமரகுரு, பிப்ரவரி 12–ந்தேதி இளங்கோவன் திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆகவேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்