கணவர் பானிபூரி வாங்கி கொடுக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை

கணவர் பானிபூரி வாங்கி கொடுக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-13 22:38 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே கணவர் பானிபூரி வாங்கி கொடுக்காததால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு வடக்குதெருவை சேர்ந்தவர் சுசீலா(வயது 47). இவருடைய மூத்த மகள் ரெத்தின ஷிபா(28), டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். இவருக்கும் பூதப்பாண்டி அருகே பெருந்தலைக்காடு முந்திரித்தெரு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜகுமார்(34) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 7 மாத கைக்குழந்தையும் உள்ளனர். ரெத்தின ஷிபா, திட்டுவிளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதமாக ரெத்தின ஷிபா, வேலைக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜகுமார் குடும்பத்துடன் எட்டாமடையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு சென்றார். பின்னர், திருவிழா முடிந்ததும் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ரெத்தின ஷிபா, பானிபூரி வாங்கி தருமாறு கணவரிடம் கேட்டதாகவும், அதற்கு ராஜகுமார் பானிபூரி வாங்கி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த பின் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ராஜகுமார், தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டின் முன் பகுதியில் படுத்திருந்தார். ரெத்தின ஷிபா கைக்குழந்தையுடன் படுக்கையறையில் படுக்க சென்றார்.

நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் ராஜகுமார், படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, தூக்கில் ரெத்தின ஷிபா பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். பின்னர், இதுபற்றி தனது சகோதரர் ராஜேஷ்வரனுக்கும், பூதப்பாண்டி போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரெத்தின ஷிபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரெத்தின ஷிபாவின் தாயார் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. சரண்யா அரி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்