உசிலம்பட்டி அருகே பரிதாபம்: கிணற்றினுள் குதித்து விளையாடிய மாணவர் பலி

உசிலம்பட்டி அருகே கிணற்றில் குதித்து விளையாடிய போது பக்கவாட்டு சுவரில் மோதி 10–ம் வகுப்பு மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2019-01-13 22:58 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் விஷால் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊருக்கு அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் விஷால் குளிக்கச் சென்றார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளையன் மகன் ஜெயக்கொடி (13) என்ற சிறுவனும் குளிக்கச் சென்றான். ஜெயக்கொடி 8–ம் வகுப்பு படித்து வருகிறார். 2 பேருக்கும் நீச்சல் தெரியும்.

கிணற்றின் மேலிருந்து தலைகீழாக 2 பேரும் குதித்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் 2 பேரும் சேர்ந்து கிணற்றின் மேலிருந்து தலைகீழாக குதித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று சுற்றுச்சுவர் பக்கவாட்டில் பாறை மீது 2 பேரும் விழுந்தனர். பாறை மீது மோதியதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த விஷால் கிணற்று நீரில் நீந்த முடியாமல் மூழ்கி இறந்துபோனார். ஜெயக்கொடி காயத்துடன் கிணற்றில் இருந்து வெளியே வந்து அருகிலுள்ளவர்களை சத்தம் போட்டு அழைத்துள்ளார். அதன்படி விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றில் மூழ்கிய மாணவரை மீட்க போராடினர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவனது உடல் தெரியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வந்த தீயணைப்பு படையினர், விஷால் உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காயமடைந்த ஜெயக்கொடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் சடச்சிபட்டியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்