பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் இந்தோனேசியாவை சேர்ந்தவர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்தோனேசியாவை சேர்ந்தவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-13 23:07 GMT
பெங்களூரு,

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் வழக்கம்போல் சுங்கத்துறை மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவரின் உடைமையில் இருந்த ஆடைகளின் நடுவே வெளிநாட்டு பணம் மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பையை அதிகாரிகள் கைப்பற்றி அதில் இருந்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது அந்த பையில் 14 வகையான வெளிநாட்டு பணம் இருந்ததும், அதிகளவில் அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் போன்றவை இருந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த உடைமைகளின் உரிமையாளரான இந்தோனேசியாவை சேர்ந்த 56 வயது நிரம்பியவரை அதிகாரிகள் கைது செய்த னர். அவர் பெங்களூருவில் இருந்து பாங்காக்கிற்கு விமானத்தில் பயணிக்க முயன்றதும் தெரியவந்தது.

கைதானவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு பணம் குறித்து அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்