சேலம் நகரமலையில் திடீர் தீ அடிவார பகுதி மக்கள் அச்சத்தில் தவிப்பு

சேலம் நகரமலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் விடிய, விடிய அச்சத்தில் தவித்தனர்.

Update: 2019-01-14 23:08 GMT
சேலம்,

சேலம் அழகாபுரம் பின்புறம் நகரமலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் மலைப்பகுதியில் உள்ள மரங்களில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இரவு நேரத்தில் அதிக அளவு காற்று வீசியதால் தீ மள மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் அந்த மலைப்பகுதியில் உள்ள பல்வேறு வகையான மரங்கள் தீயில் கொழுந்து விட்டு எரியத்தொடங்கின. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சேலம் வனச்சரக அலுவலர் சுப்பிரமணி தலைமையில் வனக்காப்பாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினரும், சேலம் தீயணைப்பு நிலைய அதிகாரி(பொறுப்பு) சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மலைப்பகுதியில் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகரமலை பகுதியில் காற்றுப்பலமாக வீசுவதால் தீயை அணைக்க வனத்துறையினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் வண்டியை மலையின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர்கள் மலையின் அடிவார குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வண்டியுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மலையின் மேல் பகுதிக்கு சென்று யாராவது சிலர் மது அருந்தி இருப்பார்கள். அப்போது அவர்கள் பீடியோ அல்லது சிகரெட்டோ பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை அந்த பகுதியில் போட்டு விட்டு சென்று இருப்பார்கள். இதன் மூலம் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறினர்.

இந்த தீ விபத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நகரமலை அடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளிலும் தீப்பிடித்து விடுமோ? என விடிய, விடிய அச்சத்தில் தவித்தனர்.

மேலும் செய்திகள்