கோடநாடு விவகாரத்தில் நியாயமான விசாரணை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

கோடநாடு விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-01-16 23:30 GMT
பழனி,

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் 80 சதவீத இடங்களை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றும். வீழும் தமிழகம் வேண்டுமா? வளரும் தமிழகம் வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம்.

அதுபோல தான் கோடநாடு விவகாரம். ஆதாரத்துடன் குற்றச்சாட்டு இருப்பின் அது உண்மையா? என்பது போலீசார் விசாரணையில் தெரியவரும். அதேநேரத்தில் விசாரணையை நியாயமாக நடத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு முழுமையான அதிகாரம் வழங்க வேண்டும். ஒரு மாநிலத்தை கூட நிர்வகிக்க திறனில்லாத டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சனம் செய்ய தகுதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்