சென்னை விமான நிலையத்தில் ரூ.9½ லட்சம் தங்கம்-விலை உயர்ந்த சிகரெட்டுகள் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-01-17 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் வந்த இலங்கையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், விலை உயர்ந்த 2 சிகரெட்டு பாக்கெட்டுகள் இருந்தன.

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் சிறு சிறு துண்டுகளாக தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.9½ லட்சம் மதிப்புள்ள 280 கிராம் தங்கத்தையும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர், யாருக்காக தங்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என பிடிபட்ட இலங்கை வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்