திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு

திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-18 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் நிலைய வளாகத்தின் முன்புறத்தில், இந்தியன் வங்கி கிளையின் ஏ.டி.எம். எந்திரம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று காலையில் இருந்தே ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த ஏ.டி.எம். எந்திர அறையில் உள்ள அபாய மணி ஒலித்தது. வழக்கமாக யாராவது பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இந்த எச்சரிக்கை மணி ஒலிக்கும்.

இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் ஏ.டி.எம். மையத்திற்குள் ஓடி சென்றுபார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அங்கு சோதனை நடத்தினார்கள். அப்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த எச்சரிக்கை மணி ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனரை அழைத்து வந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்