சுரண்டை அருகே கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் உடல் வெந்த தொழிலாளி பரிதாப சாவு

சுரண்டை அருகே, கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் உடல் வெந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-18 21:30 GMT

சுரண்டை, 

சுரண்டை அருகே, கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் உடல் வெந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டல் தொழிலாளி

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 42). இவர் கேரளாவில் உள்ள ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி முருகம்மாள் (38). இவர் சுரண்டை நகர பஞ்சாயத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மகாராஜன் அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். அப்போது மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அதேபோல் பொங்கல் பண்டிகை விடுமுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஜன் ஊருக்கு வந்தார்.

கொதிக்கும் எண்ணெய்

நேற்று முன்தினம் மதியம் மகாராஜன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவருடைய குழந்தைகள், பொங்கல் விளையாட்டு போட்டிகளை பார்க்க வெளியே சென்று விட்டனர். அப்போது மகாராஜன், முருகம்மாளிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த முருகம்மாள், அடுப்பில் சட்டியில் இருந்த கொதிக்கும் எண்ணெயை தூக்கி மகாராஜன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் அவரது உடல் வெந்தது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பரிதாப சாவு

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை மகாராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றியதில் கணவர் உடல் வெந்து பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்