தமிழ்நாட்டில் மே மாதத்திற்கு பின்பு ஆட்சி மாற்றம் ஏற்படும் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

தமிழ்நாட்டில் வருகிற மே மாதத்திற்கு பின்பு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.

Update: 2019-01-18 23:30 GMT

பரமக்குடி,

அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகிற 20, 21 ஆகிய தேதிகளில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வ.து.ந. ஆனந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராஜாராம் பாண்டியன், செந்தில்குமார், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி, மாநில மருத்துவரணி செயலாளர் முத்தையா, துணை செயலாளர் கபிலன், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசும் போது கூறியதாவது:–

ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தை சொல்லி தேர்தலை நிறுத்துகின்றனர். திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடந்திருந்தால் அ.ம.மு.க. தான் வெற்றி பெற்றிருக்கும். இது தெரிந்து தான் அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் எப்போது எந்த தேர்தல் நடந்தாலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் வருகிற மே மாதத்திற்கு பின்பு தான் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. அதில் அ.ம.மு.க. வெற்றி பெறும். அதன்பிறகு தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பையா, எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மணல் சந்திரசேகர், ஒன்றிய இணை செயலாளர் ரவி, பார்த்திபனூர் நகர செயலாளர் ராமநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் விசுவநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், ஒன்றிய தலைவர் அருண்குமார், நகர இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்