கோட்டூர்புரத்தில் தந்தை கொலைக்கு பழி வாங்க சதி திட்டம் நண்பருடன் வாலிபர் கைது

கோட்டூர்புரத்தில் தந்தை கொலைக்கு பழி வாங்க சதி திட்டம் தீட்டியதால் நண்பருடன் வாலிபரை கைது செய்தனர்.

Update: 2019-01-18 21:30 GMT
அடையாறு,

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் மெகபுல் பாஷா என்ற பப்லு(வயது 20). இவர் மீது சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, கோட்டூர்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.

இவருடைய தந்தை முகமதுகான், 1999-ம் ஆண்டு 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேருக்கு கீழ் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் மேல்முறையீடு செய்து 5 வருடம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தனர். அதில் ஒருவர் இறந்து விட, மீதம் உள்ள 9 பேர் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

கடந்த 3-ந்தேதி முகமதுகான் கொலை வழக்கில் தொடர்புடைய அருள்தாஸ் என்பவரை மெகபுல் பாஷா தனது நண்பருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது மெகபுல் பாஷா தனது நண்பருடன் பேசிய செல்போன் உரையாடல்களை ஆராய்ந்தபோது, அவர் தனது தந்தையை கொன்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டமிட்டு உள்ள திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

இதையடுத்து கொலை சதியுடன் தலைமறைவாக இருந்த மெகபுல் பாஷாவை தனிப்படை அமைத்து கோட்டூர்புரம் போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கோட்டூர்புரம் பகுதியில் பதுங்கி இருந்த மெகபுல் பாஷா, அவருடைய நண்பரான பெரும்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்(19) இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்