பெருங்களத்தூரில் ஐஸ்கிரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு கண்காணிப்பு கேமராவில் மர்ம நபரின் உருவம் பதிவு

பெருங்களத்தூரில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் உறவினருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-01-18 23:45 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூர், குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். இவர், அதே பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து உள்ளார். இவர், பெருங்களத்தூர் பேரூராட்சி 10-வது வார்டு தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான ஐசக் என்பவரின் உறவினர் ஆவார்.

நேற்று மதியம் ஜெபசிங்கின் கடைக்கு கையில் பெட்ரோல் குண்டுடன், ‘இது ஐசக் கடையா?’ என்று கேட்டுக்கொண்டே மர்மநபர் ஒருவர் வந்தார். இதை கண்டதும், கடையில் இருந்த பெண் ஊழியர் உள்பட 2 பேர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

அந்த நபர், கையில் இருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கீழே வைத்து தீ வைத்தார். பின்னர் எரியும் தீயுடன் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கடையின் முன்பகுதியில் தூக்கி எறிந்தார். இதில் பெட்ரோல் குண்டு வெடித்து, கடையின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் பீர்க்கன்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில் கடைக்கு வந்து பெட்ரோல் குண்டு வீசி சென்ற நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து நடத்திய விசாரணையில் அந்த நபர், அதே பகுதியை சேர்ந்த ஜெபசுந்தர் என்பது தெரியவந்தது. இதுபற்றி பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபசுந்தரை தேடி வருகின்றனர்.

அவர் கைதானால்தான் எதற்காக ஐஸ்கிரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீசினார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்