மது குடித்த போது தகராறு: தனியார் நிறுவன தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - நண்பர் கைது

மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-18 23:00 GMT
ராயக்கோட்டை,

மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்தப்பா. இவருடைய மகன் லோகேஷ் (வயது 28). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பூதட்டியப்பா என்பவரது மகன் குன்னய்யா (22). இவரும், லோகேசும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் இருவரும் சேர்ந்து ஒன்றாக மது குடிப்பது வழக்கம். குன்னய்யா தனது பாதுகாப்புக்காக எப்போதும் கத்தி வைத்திருப்பார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோகேசும், குன்னய்யாவும் மதுக்கடை ஒன்றில் மது வாங்கி விட்டு சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த குன்னய்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகேசின் கழுத்தில் குத்தினார். மேலும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் லோகேஷ் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் லோகேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்ரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் லோகேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குன்னய்யாவை கைது செய்தனர். மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்