அரசலூரில் 27-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது

அரசலூரில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

Update: 2019-01-18 23:44 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் கிராமத்தில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. அரசலூர் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசுகையில், அரசலூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்கள் பகுதி தாசில்தாரிடம் தங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டும். வீரர்கள் உடல்தகுதி குறித்து உரிய மருத்துவரிடம் சான்று பெற்று ஆஜர் செய்த பின்னரே, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்படவில்லை என்றும், காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா? என்பதனை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்றளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் கண்காணித்து பதிவு செய்யப்படவேண்டும். பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக கேலரி வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு, அதன் திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும், வால் மற்றும் காது போன்றவற்றை பிடிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டு மருத்துவர்களும், ஆம்புலன்சும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் தர்ஷீலா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், தாசில்தார் பொன்னுதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்