பாபநாசத்தில் கயல் திட்டம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

பாபநாசத்தில் கயல் திட்டத்தை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.

Update: 2019-01-19 22:30 GMT

விக்கிரமசிங்கபுரம், 

பாபநாசத்தில் கயல் திட்டத்தை கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார்.

கயல் திட்டம்

நெல்லை மாவட்டம் களக்காடு– முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி அருகே, ரூ.25 லட்சம் செலவில் கயல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆறுகள், மீன்கள், அரியவகை ஆமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று அதன் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, கயல் திட்டத்தை தொடங்கி வைத்தார். முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். புலிகள் காப்பக அம்பை துணை இயக்குனர் கொம்மு ஓம்கார் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் ஷில்பா பேசுகையில், புலிகள் காப்பகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கயல் திட்டம் பாராட்டுக்கு உரியது. இந்த திட்டத்தின் மூலம் தாமிரபரணி ஆற்றில் உள்ள மீன்களின் வகைகள், அவைகள் வளரும் விதம், அரிய வகை ஆமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை பார்வையிட்டு, கயல் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

கலைநிகழ்ச்சி

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பூங்கா, பழங்குடியினர் குடில், வனப்பகுதிகளில் விளையும் பொருட்களின் கண்காட்சி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலாசார பாட்டு பாடப்பட்டு, அங்குள்ள குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியில் நெல்லை கால்நடை மருத்துவர் சுகுமார், பேராசிரியர்கள் செல்லத்துரை, ஆல்பர்ட் ராஜேந்திரன், வனத்துறை ரேஞ்சர்கள் பாரத் (பாபநாசம்), நெல்லை நாயகம் (கடையம்), சரவணக்குமார் (முண்டந்துறை), கார்த்திகேயன் (அம்பை), வனவர்கள் மோகன், முருகேசன், பலவேச கண்ணன் மற்றும் சூழல் மேம்பாட்டு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனப்பணியாளர்கள், வனக்குழு உறுப்பினர்கள், பழங்குடியின மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்