கரிவலம்வந்தநல்லூர் அருகே கோவில்களில் 18 பவுன் நகை கொள்ளை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

கரிவலம்வந்தநல்லூர் அருகே கோவில்களில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.

Update: 2019-01-19 22:00 GMT

சங்கரன்கோவில், 

கரிவலம்வந்தநல்லூர் அருகே கோவில்களில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின. இச்சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் கொள்ளை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் வீரகாளி (வயது 48). இவர் அங்குள்ள அம்மன் கோவிலின் பூசாரியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் மாலையில் கோவிலுக்கு திரும்பி வந்து பார்த்த போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த சில்லறை காசுகளை மட்டும் போட்டுவிட்டு, ரூபாய் நோட்டுகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் கோவிலுக்குள் இருந்த 3 பவுன் தங்க காசும் கொள்ளை போயிருந்தது.

மற்றொரு சம்பவம்

பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது வீட்டின் அருகில் மாரியம்மன் கோவில் கட்டி அதன் பூசாரியாக இருந்து வருகிறார். வீட்டின் முன்புறம் கோவில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவில் பூஜைகளை முடித்து விட்டு வயலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள வேலைகளை முடித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது கோவிலின் கதவு மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலில் வைத்திருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவங்கள் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சந்தேகப்படும்படியாக இருந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா?, கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் ஏற்கனவே நடந்த மற்ற கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்