தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்

கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-20 00:15 GMT

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா (வயது 32). இவர்களுடைய மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் அதே பகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்தார். அவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென்று இறந்து விட்டார். இதனால் சஜிதா, மனோஜ் வீட்டில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி இரவு 11 மணியளவில் தனது 2 மகள்களையும் ஒரு அறையில் தூங்க வைத்து விட்டு சஜிதா மற்றொரு அறையில் தூங்கினார்.

நேற்று முன்தினம் காலை சுபாஷினி எழுந்து பார்த்தபோது தன்னுடன் தூங்கிய தனது சகோதரி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் அப்பகுதி மக்கள் உதவியுடன் ஸ்ரீஹர்ஷினியை தேடிப்பார்த்தனர். ஆனால் அவள் கிடைக்காததால் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று சஜிதா அழுது கொண்டே புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் சஜிதாவை அழைத்து கொண்டு எம்.கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சிறுமியை தேடினர். ஆனால் அங்கு சிறுமி கிடைக்காததால் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர். அப்போது அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை போலீசார் திறந்து பார்த்தபோது ஒரு பொம்மையுடன் சிறுமி ஸ்ரீஹர்ஷினி தண்ணீரில் பிணமாக மிதப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சிறுமி பிணமாக கிடந்த பங்களாவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் தொட்டிக்கு அருகே உள்ள கேமராவின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இரவு தூங்க போன சிறுமி அதிகாலை நேரத்தில் காணாமல் போனதாக அவரது தாயார் புகார் அளித்திருந்ததால் சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே சிறுமியை அவளது தாயே கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதனைதொடர்ந்து, சிறுமியின் மரணம் குறித்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சஜிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து சஜிதா போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

எனது கணவர் பிரபாகரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் ரூ.2 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் திடீரென்று இறந்து விட்டார். எனவே கடனை கட்டுவதற்கும், குடும்பத்தை கவனிக்கவும் வேண்டி நான் அவர் பணி செய்த அதே பங்களாவில் பணிபுரிந்து கொண்டே, வெளியே தோட்ட வேலைக்கும் சென்று வந்தேன். எனது 2–வது மகளுக்கு 4½ வயதே ஆவதால் அவளை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என்பது சிரமமாக இருந்தது. எனவே மகளை கொன்று விட முடிவு செய்தேன். எனவே இரவு மது அருந்தி விட்டு எனது மனதை கல்லாக்கிக்கொண்டேன். நள்ளிரவு 1.30 மணியளவில் பொம்மையை கட்டிப்பிடித்துக்கொண்டு நன்றாக தூங்கிக்கொண்டிருந்த எனது மகளை தூக்கி கொண்டு நான் வேலை பார்க்கும் பங்களாவிற்கு சென்றேன். பின்னர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் அவளை மூழ்கடித்து கொலை செய்து விட்டு தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து படுத்து விட்டேன்.

காலையில் எனது மூத்த மகள் சுபாஷினி தனது தங்கை ஸ்ரீஹர்ஷினி காணவில்லை என்று அழுது கொண்டே கூறினார். இதனால் என்மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று அப்பகுதி மக்களுடன் சேர்த்து அவளை தேடினேன். பின்னர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என்று கூறி புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் துருவி, துருவி கேள்விகளை கேட்டு விசாரித்ததில் இனி தப்பிக்க முடியாது என்பதால் நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

பெற்ற தாயே தனது 4½ வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்